போக்குவரத்து கழக ஓய்வூதியர்களின் நிலையை கருத்தில் கொண்டு அவர்களுக்கு உடனடியாக அகவிலைப்படி உயர்வை நிலுவை தொகையுடன் சேர்த்து தமிழக அரசு வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு கடந்த 81 மாதங்களாக அகவிலைப்படி உயர்வு வழங்கவில்லை. போக்குவரத்துகழக ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் ஆணையிட்ட பிறகும் கூட அதனை செயல்படுத்த தமிழக அரசு தயங்குவது நியாயமற்ற ஏற்றுக் கொள்ள முடியாத செயலாகும்.
அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தின் மீது ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. ஆனால் போக்குவரத்து கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தின் மீதான அகவிலைப்படி உயர்வு கடந்த 2015 ஆம் வருடம் நவம்பர் மாதம் முதல் காரணம் இல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து கழக ஓய்வூதியர்களும் போராட்டங்களை நடத்தி இருக்கின்றனர். அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்ற தீர்ப்பை போக்குவரத்து கழகங்கள் செயல்படுத்தாததை எதிர்த்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்பட்டிருக்கிறது.
இதற்கு பிறகும் அகவிலைப்படி உயர்வை வழங்க போக்குவரத்துக் கழகங்கள் மறுப்பது எந்த வகையில் நியாயம்? போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத்திற்கான அகவிலைப்படியை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கையை தமிழக அரசும் கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டுள்ளது. ஆனால் அரசிடம் போதிய நிதி இல்லாததால் அகவிலைப்படி உயர்வு வழங்க மறுக்கிறது இதனை நியாயப்படுத்த முடியாது. அரசு நிலைமை சரியாக இல்லை என்பதற்காக போக்குவரத்து கழக ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை மறுக்க முடியாது.
கடந்த 81 மாதங்களில் வாழ்வாதார செலவுகள் கணிசமாக அதிகரித்துள்ளது. அகவிலைப்படியை உயர்த்தினால் மட்டுமே ஓய்வூதியதாரர்களால் அதனை சமாளிக்க முடியும். அகவிலைப்படி உயர்வு நிறுத்தப்பட்டதால் அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற சுமார் 80 ஆயிரம் மூத்த குடிமக்கள் கடந்த 81 மாதங்களாக கடுமையான பாதிப்புகளை எதிர் கொண்டு வருகின்றார்கள். அவர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்துவதால் சராசரியாக மாதம் 1500 மட்டுமே கூடுதலாக வழங்க வேண்டியிருக்கும் தமிழக அரசின் பட்ஜெட் மதிப்புடன் ஒப்பிடும்போது இது பெரிய சுமை அல்ல. அதனால் போக்குவரத்து கழக ஓய்வுதிகளின் நிலையை கருத்தில் கொண்டு அவர்களுக்கு உடனடியாக அகவிலைப்படி உயர்வை நிலவை தொகையுடன் சேர்த்து தமிழக அரசு வழங்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.