கடந்த 2020ம் வருடம் மே மாதம் முதல் 2021ம் ஆண்டு ஜூன் மாதம் வரையிலும் கொரோனா நெருக்கடி காலகட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை. கொரோனாவால் ஏற்படும் நிதிச் நெருக்கடியை சமாளிப்பதற்கு இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதற்கிடையில் அகவிலைப்படி நிலுவைத் தொகைக்காக கடந்த சில மாதங்களாகவே மத்திய அரசு ஊழியர்கள் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் நிலுவைத் தொகை விரைவில் மொத்தமாக ஒரே தவணையில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலுவைத் தொகைக்கக சுமார் 48 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் 60 லட்சம் பென்சனர்கள் காத்திருக்கின்றனர். அகவிலைப்படி நிலுவைத் தொகையை மொத்தமாக ஒரே தவணையில் செலுத்துவது தொடர்பாக அரசிடம் ஊழியர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும் அகவிலைப்படி நிலுவைத் தொகை தொடர்பாக நிதியமைச்சகத்துடனும் ஊழியர்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
ஆனால் எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் இருந்து வந்தது. இந்நிலையில் இம்மாதமே இது தொடர்பாக மத்திய அரசு முடிவெடுக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து கேபினட் செயலாளருடன் ஆலோசிக்கப்பட இருக்கிறது. இந்த விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியும் கேட்டறிந்துள்ளதால் விரைவில் அகவிலைப்படி நிலுவைத் தொகை தொடர்பாக தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.