மணிப்பூர் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது. அதாவது 60 தொகுதிகள் கொண்ட மணிப்பூரில் 32 தொகுதிகளை பா.ஜ.க கைப்பற்றியது. மணிப்பூர் மாநிலத்தில் 2002ஆம் வருடம் முதல் 2017 வரை காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தது. அதுமட்டுமல்லாமல் ஒக்ராம் இபோபி சிங் அசைக்க முடியாத முதல்வராக இருந்தார். 2017 ம் ஆண்டு தேர்தலில் நாகா மக்கள் முன்னணி, நாகா மக்கள் கட்சியுடன் இணைந்து பா.ஜ.க ஆட்சியைப் பிடித்தது. அதன்பின் பிரேன் சிங் முதலமைச்சரானார். ஆனால் அந்தக் கூட்டணியால் பா.ஜ.க அவ்வப்போது சிக்கல்களை எதிர்கொண்டது.
அதனை தொடர்ந்து நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தேர்தலுக்கு முந்தைய கூட்டணி கிடையாது என்று அறிவித்துவிட்டுதான் பா.ஜ.க களமிறங்கியது. காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள் தனித்துக் களத்தில் இறங்கியது. சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் பா.ஜ.கவுக்கு சாதகமாக வந்தது. இந்த நிலையில் புதிய முதலமைச்சரை தேர்ந்தெடுப்பதற்காக தலைநகர் இம்பாலில் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. அந்த வகையில் மேலிட பார்வையாளர்களும், மத்திய அமைச்சர்களுமான நிர்மலா சீதாராமன், கிரண் ரிஜிஜு தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பிரேன் சிங் மீண்டும் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். அந்த அமைச்சரவையின் முதல் கூட்டத்தில் அரசு அலுவலகங்கள் வாரத்தில் 5 நாள்கள் மட்டுமே இயங்கும் எனவும் சனி, ஞாயிறு போன்ற 2 நாட்கள் விடுமுறை எனவும் முடிவு செய்யப்பட்டது.
இந்த விடுமுறை தொடர்பான அறிவிப்பை முதல்வர் அலுவலகம் அறிக்கையாக வெளியிட்டுள்ளது. அதில் அரசு அலுவலகங்கள் 5 நாள் மட்டுமே இயங்கும். அத்துடன் இந்த விடுமுறை அறிவிப்பால் அரசு ஊழியர்களின் பணி மற்றும் உற்பத்தித்திறன் மேம்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மணிப்பூர் மாநிலத்திலுள்ள அலுவலகங்களின் தொடக்க நேரம் காலை 9 மணி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின் வீட்டு நிர்வாகம் மற்றும் போக்குவரத்து நெருக்கடியை கருத்தில் கொண்டு பள்ளிகளில் வகுப்புகள் காலை 8 மணிக்கே துவங்கும். இதன் காரணமாக மதிய நேரங்களில் பள்ளி மாணவர்கள் வீடுகளில் பாடங்களை படிக்க நேரம் கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.