மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி அண்மையில்தான் 31 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதையடுத்து ஒவ்வொரு மாநிலமாக அகவிலைப்படி உயர்வு பற்றிய அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன. அதேசமயம் அகவிலைப்படி விரைவில் 34 சதவீதமாக உயர்த்தப்படும் எனவும் தகவல் வெளியாகியது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு மேலும் மகிழ்ச்சி தரும் வகையில், அடிப்படை ஊதிய உயர்வு குறித்த பேச்சுகள் அதிகரித்துள்ளன.
வரும் ஜனவரி 26ஆம் தேதி இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஊதிய உயர்வு குறித்து ஃபிட்மெண்ட் காரணியை உயர்த்துவதற்கான ஆலோசனையில் மோடி அரசு ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஒருவேளை ஃபிட்மென்ட் காரணியை மோடி அரசு உயர்த்தினால், ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் அதாவது அடிப்படை சம்பளம் 26,000 ரூபாயாக அதிகரிக்கும். இதுகுறித்து தொழிலாளர் துறை, அரசு அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் ஒன்று ஜனவரி 26ஆம் தேதிக்கு முன் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதன்பின் குறைந்தபட்ச சம்பள உயர்வு பற்றிய அறிவிப்பு வெளியாக வாய்ப்பு இருக்கிறது. இறுதியாக கடந்த 2016ம் வருடம் ஃபிட்மென்ட் காரணி உயர்த்தப்பட்டது. அதில் அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் 6,000 ரூபாயில் இருந்து 18,000 ரூபாயாக உயர்த்தப்பட்டது. தற்போதைய தகவலின்படி அடிப்படை ஊதியம் 26,000 ரூபாயாக உயர வாய்ப்புள்ளது. அதேபோன்று அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி நிலுவைத் தொகையும் விரைவில் வழங்கப்படவுள்ளது. 18 மாதங்களுக்கான தொகை நிலுவையில் இருப்பதால் அதை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி நிலுவைத்தொகை 2 லட்சம் ருபாய் வரையில் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.