நாடு முழுவதிலும் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் மாநில வாரியாக ஊதிய உயர்வு அளிக்கப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் உத்திரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. தற்போது கோவா மாநிலத்தில் ஊதிய உயர்வு வழங்குமாறு கோரிக்கை வைத்து அரசு ஊழியர்கள் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். அதாவது கோவா மாநிலத்தில் முதலமைச்சர் பிரமோத் சவாந்த் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. கோவா மாநிலத்தில் அடுத்த வருடம் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது.
இந்த நிலையில் ஊதிய உயர்வு வேண்டும் என்று அங்கன்வாடி ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஊதிய உயர்வு உட்பட கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் வரை இந்த போராட்டம் தொடரும் என்று அங்கன்வாடி ஊழியர்கள் தெரிவித்து உள்ளனர். இதனிடையில் நடைபெற்ற கூட்டத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் மத்தியில் முதலமைச்சர் பிரமோத் சவாந்த் அவர்கள் பேச்சுவார்த்தை மேற்கொண்டார். அப்போது அவர், அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதாவது அங்கன்வாடி ஊழியர்களின் 90% கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு விட்டது. அந்த அடிப்படையில் அங்கன்வாடி ஊழியர்களின் ஊதிய உயர்வு கோரிக்கை கடந்த நவம்பர் மாதம் ஏற்றுக்கொள்ளப்பட்டு அதற்கான அரசாணை வெளியிடப்பட்டு விட்டது. அதன்படி வரும் 2022 ஏப்ரல் மாதம் 1-ம் தேதி முதல் ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இதனைதொடர்ந்து அவர்களுக்கு அரியர் பணம் மற்றும் ஓய்வூதிய பணப் பலன்களும் உயர்த்தி வழங்கப்பட்டு உள்ளன என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் அங்கன்வாடி ஊழியர்கள் 30% வரை ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்றும், தற்போது வழங்கிய ஊதிய உயர்வில் திருப்தியில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.