டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளது. டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயிகள் பயிர்க் கழிவுகளை தீயிட்டு கொளுத்துவது, தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் புகை ஆகியவை காற்றில் கலப்பதால் காற்று மாசு ஏற்பட்டுள்ளது. அதனால் டெல்லியில் உள்ள மக்கள் வெளியே வர முடியாமல் மிகவும் அவதிப்படுகின்றனர். அதன் காரணமாக டெல்லி அரசு பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்கள் ஆகிய அனைத்திற்கும் ஒரு வாரம் விடுமுறை அறிவித்தது.
அதனால் அரசு ஊழியர்கள் அனைவரும் வீட்டில் இருந்து தங்களின் வேலைகளை செய்ய வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் மறு உத்தரவு வரும் வரை விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது டெல்லியில் காற்று மாசு குறைந்து வருவதால் அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகள் வருகின்ற திங்கட்கிழமை முதல் திறக்கப்படும் என்று டெல்லி அரசு அறிவித்துள்ளது.
அதனால் அரசு ஊழியர்கள் கண்டிப்பான முறையில் அலுவலகத்திற்கு வர வேண்டும். மக்கள் தங்கள் சொந்த வாகனங்களை பயன்படுத்தாமல் பொது போக்குவரத்தில் பயணம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் வசிக்கும் பகுதியில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். அதனை பயன்படுத்தி அரசு ஊழியர்கள் தங்கள் அலுவலகத்திற்கு சுலபமாக வரலாம் என்றும் டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.