தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அரசு சார்ந்த பொதுத்துறை ஊழியர்கள் மற்றும் அரசு உதவிபெறும் கல்வி நிறுவன ஊழியர்கள் ஆகியோருக்கு ஓய்வு பெறும் வயது 58 ஆக இருந்தது. அதன்பிறகு கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக நிதிச் சிக்கல் வந்ததால் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தப்படுகிறது என்று முன்னாள் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.இந்த உத்தரவு தற்போது அரசு பணியில் இருக்கும் அனைவருக்கும் மற்றும் 2021 மே 31ஆம் தேதி முதல் பணியிலிருந்து ஓய்வு பெறும் ஊழியர்களுக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டது.இந்த அறிவிப்புக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில் திமுக அரசு பொறுப்பேற்றதும் முதல்வர் தனிப்பிரிவுக்கு வந்த மனுக்களின் அடிப்படையில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை மீண்டும் 58 ஆக குறைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கான கோப்புகள் தயாரிக்கப்பட்டு முதல்வரின் ஒப்புதலுக்காக வைக்கப்பட்டுள்ளது என்று கோட்டை வட்டாரங்கள் கூறுகின்றனர். இந்த உத்தரவு அடுத்த ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமல்படுத்த வாய்ப்புள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த உத்தரவு அமலுக்கு வந்தால் ஆயிரக்கணக்கானோர் உடனடியாக ஓய்வுபெறும் நிலை ஏற்படும். இதனால் ஓய்வுதிய பணப்பலன்கள் உடனடியாக கிடைக்குமா என்றும் கேள்வி எழுந்துள்ளது.