இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டு பணவீக்கத்தால் விலைவாசி உயர்ந்து கொண்டே போகிறது. இதனை சமாளிப்பதற்காக அரசு ஊழியர்களுக்கு ஆறு மாதத்திற்கு ஒருமுறை அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. அதன்படி அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது. கடந்தமார்ச் மாதத்தில் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 34% உயர்த்தப்பட்டது. இந்நிலையில் அகவிலைப்படி 34% இருந்து 38% ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்று மத்திய அரசு பெயரில் அறிக்கை ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த அறிக்கை 23ஆம் தேதி வெளியாக உள்ளதாக தேதியிடப்பட்டுள்ளது.
அதில், மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 34% இருந்து 38% ஆக உயர்த்த குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதுகுறித்து நிதியமைச்சகம் சார்பில் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால் அரசு ஊழியர்கள் மத்தியில் பரபரப்பும் குழப்பமும் ஏற்பட்டது. இந்நிலையில் இதற்கும் மத்திய அரசின் கீழ் இயங்கும் பத்திரிக்கை தகவல் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது. அதாவது, அகவிலைப்படி உயர்வு குறித்து மேற்கூறிய தகவல் மத்திய அரசின் செலவினத்துறை எந்த ஒரு உத்தரவும் வெளியிடவில்லை என்று தெரிவித்துள்ளது. எனவே இந்த பொய் தகவலை யாரும் நம்ப வேண்டாம். அதுமட்டுமில்லாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.