அரசு ஒப்பந்ததாரரை தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வேடசந்தூர் பகுதியில் உள்ள எரியோட்டையில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் நாடார் சங்கத்தின் நிர்வாகியாகவும் அரசு ஒப்பந்ததாரராகவும் இருந்து வருகிறார். இவர் இந்த பகுதியில் இருக்கும் விநாயகர் கோவிலின் முன்பாக அமர்ந்து சிலருடன் பேசி கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர் பழனிச்சாமியை அரிவாளால் வெட்டி கொடூரமாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த பழனிச்சாமியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்நிலையில் பழனிசாமியை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து எரியோட்டு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பழனிச்சாமியை வெட்டிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வந்துள்ளனர். இந்த வழக்கில் சம்பத்தப்பட்ட பெரியசாமி, பிரவீன், சந்துரு, ரஞ்சித், பிரவீன் குமார் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் முன்விரோதம் காரணமாக பழனிசாமியை அரிவாளால் வெட்டியது தெரியவந்துள்ளது. மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் 5 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்