கல்லூரி நேரத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று மாணவிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்துள்ள கெரகோடஅள்ளி பகுதியில் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் 1,000-க்கும் அதிகமான மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த கல்லூரியில் பி.ஏ தமிழ், ஆங்கிலம், வரலாறு, பி.காம், பி.பி.ஏ, பி.எஸ்.சி, கணிதம், கணினி அறிவியல், இயற்பியல், வேதியல் காட்சி தொடர்பு ஊடகவியல் உள்ளிட்ட பிரிவுகளில் மாணவிகள் பயின்று வருகின்றனர். தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலிருந்து நிறைய மாணவிகள் இந்த கல்லூரிக்கு படிக்க வருகிறார்கள்.
மேலும் காரியமங்கலம் பேருந்து நிலையத்திலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் தர்மபுரி – கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் இந்த கல்லூரி உள்ளது. இந்த கல்லூரிக்கு ஒரு சில குறிப்பிட்ட டவுன் பேருந்துகள் மட்டும் நின்று செல்கின்றதால், மாணவிகள் அந்த சில பேருந்துகளில் முண்டியடித்துக்கொண்டு ஏறி பயணம் செய்கிறார்கள். கல்லூரி நேரத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க பலமுறை கோரிக்கை வைத்தும், புதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை.இதனால் கல்லூரி முடிந்த பின் தர்மபுரி செல்லும் பேருந்து ஒன்றில் கனரக வாகனங்களுக்கு மத்தியில் பேருந்து படிக்கட்டில் மாணவிகள் தொங்கியபடி ஆபத்தான பயணத்தை தினந்தோறும் மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்நிலையில் நேற்று முன்தினம் கல்லூரியிலிருந்து தர்மபுரி நோக்கி சென்ற பேருந்தில் மாணவிகள் தொங்கியபடி சென்ற காட்சியை ஒரு நபர் செல்போனில் படம் பிடித்து அந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் போட்டுவிட்டார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவலாக பரவி வருகிறது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கல்லூரி நேரத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.