அரசு நிகழ்ச்சிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதாக நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முருகானந்தம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “புதிய அரசு அலுவலகங்களை உருவாக்குவது, ஏற்கனவே இருக்கும் உள்கட்டமைப்புகளை பராமரிப்பது ஆகியவற்றில் செலவீனங்களை கட்டுப்படுத்தி பிறப்பிக்கப்பட்ட முந்தைய உத்தரவு தொடர்கிறது. அரசு நிகழ்வுகளில் அரசு அதிகாரிகளுக்கான மதிய உணவு, இரவு உணவு, பொழுதுபோக்கு ஆகியவற்றுக்கான செலவுகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுகிறது. ஆம்புலன்ஸ், போலீஸ், தீயணைப்பு ஆகியவற்றுக்கான வாகனங்களை வாங்குவது தவிர மற்ற புதிய வாகனங்களை வாங்க விதிக்கப்பட்ட தடையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
புதிய வாகனங்களை வாங்குவதற்கான தடை நீடித்தாலும், பழைய பழுதடைந்த வாகனங்களை மாற்றிக் கொள்வதற்காக மட்டும் புதிய வாகனங்களை வாங்கலாம். அடிப்படை பயிற்சி, கொரோனா தொடர்பான பயிற்சி தவிர மற்ற அனைத்து பயிற்சிகளும் தடை செய்யப்படுகின்றன என்ற உத்தரவு நீக்கப்படுகிறது. பழைய கம்ப்யூட்டர்களை மாற்றுவதற்கு மட்டுமே புதிய கம்யூட்டர்களை வாங்க வேண்டும், மற்றபடி புதிய கம்ப்யூட்டர்கள் வாங்கக் கூடாது என்ற தடை உத்தரவு நீக்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.