அரசு நிலங்கள் அபகரித்ததர்க்கு துணையாக இருந்த 2 தாசில்தார் உள்பட 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தேனி மாவட்டம் வடவீரநாயக்கன்பட்டி கிராமத்தில் அரசு அதிகாரிகளின் உதவியோடு அதிமுக பிரமுகர்கள் மற்றும் அவரது உறவினர்கள் உள்பட 27 பேர் அரசு நிலத்தை அபகரித்து பட்டா பெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சியருக்கு புகார் வந்துள்ளது. அதனடிப்படையில் மாவட்ட ஆட்சியர் முரளிதரனின் உத்தரவின்படி, பெரியகுளம் சப் கலெக்டர் ரிஷிப் விசாரணை நடத்தியுள்ளார். அந்த விசாரணையில் பெரியகுளம் தாலுகாவில் பணியாற்றும் தாசில்தார்களுக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து வடவீரநாயக்கன்பட்டி பகுதியில் அபகரிக்கப்பட்ட 94.65 ஏக்கர் நிலத்தை மீட்டு மீண்டும் அரசு புறம்போக்கு நிலமாக மாற்றப்பட்டுள்ளது. இதேபோல் தாமரைக்குளம் பகுதியில் 56 ஏக்கர் புறம்போக்கு நிலம் 42 பேரால் அபகரிக்கப்பட்டுள்ளதாக வந்த புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அந்த நிலங்களையும் மீட்டு அரசிடம் ஒப்படைத்துள்ளனர். இதனை தொடர்ந்து அந்த இடங்களில் பதிவு செய்யபட்ட பட்டாக்களை ரத்து செய்ய ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் நிலம் அபகரிப்பில் துணையாக பெரிய குளம் தாலுகாவில் பணியாற்றும் 2 தாசில்தார்கள், 2 துணை தாசில்தார்கள், 2 நில அளவையாளர்கள் என 6 பேரை பணியிடை நீக்கம் செய்துள்ளனர். இதனையடுத்து அபகரிப்பு செய்த நிலைகளில் இருந்து கனிமவளங்கள் எடுத்து விற்பனை செய்ததும் தெரிய வந்த நிலையில் கனிமவளத் துறை இணை இயக்குனர் முருகானந்தம் தலைமையில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அரசுக்கு சொந்தமான நிலங்கள் அபகரிக்கபட்டால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.