அரசு கடன் பத்திர முதலீட்டின் மூலம் சிறு முதலீட்டாளர்களுக்கு நேரடியாக பலன் கிடைத்திருக்கிறது. அதுவும் எந்த செலவும் இல்லாமலேயே. எனவே இன்னும் ஏராளமான முதலீட்டாளர்கள் தங்களுடைய முதலீட்டில் ஒரு பகுதியை பாதுகாப்பான முதலீடாக அரசு கடன் பத்திரங்களில் முதலீடு செய்து, அதன்மூலம் நல்ல வருமானத்தை சம்பாதிக்க முடியும். அரசு பத்திரங்களில் சிறு முதலீட்டாளர்களும் முதலீடு செய்வதற்கான வசதியை சமீபத்தில் மத்திய அரசு அமல்படுத்தியது.
இந்த அரசு பத்திரங்களில் இந்திய அரசின் சார்பில் ரிசர்வ் வங்கி ஏலம் மூலம் விற்பனை செய்து வருகிறது. முதலீட்டாளர்கள் இந்த ஏலத்தில் கலந்துகொண்டு அரசு பத்திரங்களில் முதலீடு செய்யலாம். அவ்வாறு அரசு பத்திரங்களில் முதலீடு செய்ய சிறு முதலீட்டாளர்களுக்காக தேசிய பங்குச் சந்தை goBID என்ற மொபைல் ஆப்பை புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மொபைல் ஆப்பின் மூலம் சிறு முதலீட்டாளர்களும் அரசு பத்திரங்களில் முதலீடு செய்யலாம். goBID மூலம் அரசுப் பத்திரங்களில் முதலீடு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
மொபைலில் goBID ஆப்பை டவுன்லோட் செய்து கொள்ள வேண்டும். புதிய முதலீட்டாளராக இருந்தால் பதிவு செய்து கொள்ளவும். மொபைல் ஆப்பில் விற்பனைக்கு உள்ள T- Bill/Bond-ஐ தேர்வு செய்து கொள்ளவும். டீமேட் அக்கவுண்ட்டுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கிலிருந்து ஆன்லைனில் கட்டணத்தை செலுத்த வேண்டும். நேரடியாக டீமேட் அக்கவுண்ட்டுக்கே பத்திரங்கள் வந்துவிடும்.