அரசு பள்ளிகளில் விலையில்லா நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்படாததால் மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருவதாக ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.
தமிழ்நாட்டில் சென்ற மாதம் 13ஆம் தேதி முதல் 1 முதல் +2 வரையிலான பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டு இயங்கி வருகின்றது. இந்நிலையில் தமிழக அரசின் விலையில்லா பாட புத்தகங்கள் வழங்கப்பட்ட நிலையில் நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்படவில்லை. நீலகிரியில் தொடக்க, நடுநிலை. மேல்நிலைப் பள்ளிகளில் பெரும்பாலான மாணவர்கள் படித்து வருகின்ற நிலையில் பாடங்கள் நடத்த ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. ஆனால் நோட்டு புத்தகங்கள் வழங்காததால் மாணவர்கள் படிக்க முடியாமல் பாதிக்கப்பட்டு வருகின்றார்கள்.
இந்நிலையில் ஒரு மாணவருக்கு 12 நோட்டுகள் தேவைப்படுகின்றது. ஆனால் நான்கு நோட்டுகள் என்ற கணக்கின் அடிப்படையில் ஒவ்வொரு வகுப்புகளுக்கும் குறைந்த நோட்டுகள் வழங்கப்பட்டு இருக்கின்றது. மேலும் பெரும்பாலான பள்ளிகளுக்கு நோட்டுகள் வரவில்லை. இதனால் ஆசிரியர்கள் அலுவலர்களிடம் விசாரித்த பொழுது சென்னையிலிருந்து குறைந்த அளவிலான நோட்டுகள் மட்டுமே வந்ததாக கூறினார்கள். இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியுள்ளதாவது, அந்தந்த பள்ளிக்கூடங்களுக்கு விலையில்லா நோட்டு புத்தகங்கள் நேரில் சென்று வழங்க வேண்டும். ஆனால் நீண்ட தொலைதூரங்களில் உள்ள ஆசிரியர்கள் கூடலூருக்கு வந்து வாங்கி செல்லும்படி அதிகாரிகள் கூறுகின்றனர். மாணவர்களின் தேவைக்கேற்ப இதுவரை நோட்டுப் புத்தகங்கள் தரவில்லை. இதனால் அவர்களின் கல்வி பாதிக்கப்படுகின்றது என கூறியுள்ளனர்.