சரியாக பணியாற்றாத பள்ளி தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருவாடானை தாலுகாவிற்கு உட்பட்ட பாசிபட்டினத்தில் இருக்கும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 231 மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றார்கள். மேலும் 9 ஆசிரியர்கள் வேலை செய்து வருகின்றார்கள். இந்த நிலையில் இப்பள்ளி தலைமை ஆசிரியரின் செயல்பாடு காரணமாக பள்ளியில் மாணவர் சேர்க்கை குறைந்து வருவதாகவும் சரியாக பள்ளியை பராமரிக்கவில்லை என மாவட்ட கல்வி அதிகாரிக்கு பெற்றோர்கள், ஊராட்சி மன்ற தலைவர், பள்ளி மேலாண்மை குழுவினர் உள்ளிட்டோர் மனு கொடுத்துள்ளார்கள்.
அதன் அடிப்படையில் குழு அமைக்கப்பட்டு பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார்கள். பின் இதுக்குறித்த அறிக்கையை மாவட்ட கல்வி அதிகாரியிடம் சமர்ப்பித்தார்கள். அதில் மாணவர்களுக்கு புத்தகங்களை முறையாக வழங்காதது, கொடுக்கப்பட்ட நிதியில் பள்ளியில் சரியான முறையில் செலவு செய்யாதது, பள்ளி மேலாண்மை குழு கூட்டங்கள் நடத்தாதது, செலவு செய்த தொகைக்கு உரிய ஆவணங்கள் இல்லாதது என பல்வேறு குற்றச்சாட்டுகளை அடிப்படையாகக் கொண்டு பள்ளி தலைமை ஆசிரியை முத்துலட்சுமியை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் பாலாஜி உத்தரவிட்டிருக்கின்றார்.