அரசு பள்ளி தலைமை ஆசிரியர் அறையில் மேற்கூரை பூச்சு திடீரென்று பெயர்ந்து கீழே விழுந்தது.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகில் வளநாடு செங்கப்படை கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளிக்கு செங்கப்படை, தெய்வதானம், இந்திராநகர், வளநாடு, சேமனூர், செபஸ்தியார்புரம் உட்பட பல கிராமங்களை சேர்ந்த மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் பள்ளி செயல்பட்டுக் கொண்டிருந்த போது தலைமை ஆசிரியர் அறையில் திடீரென்று மேற்கூரை சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கீழே விழுந்தது.
அப்போது தலைமை ஆசிரியர் வெளியே சென்று விட்டதால் அவர் உயிர் தப்பினார். இதனால் தலைமை ஆசிரியரின் இருக்கை இடம் சேதமடைந்து காணப்பட்டது. இத்தகவலை அறிந்த சுமார் 50-க்கும் அதிகமானவர்கள் பள்ளி முன் குவிந்தார்கள். மேலும் பள்ளி கட்டிடம், சுவர்கள் சேதம் அடைந்து, பலனின்றி இருப்பதாகவும், பெற்றோர்கள் புகார் அளித்தனர். மேலும் இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.