அரசு பள்ளி மாணவர்கள் தங்களின் ஆங்கில அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக சொந்த முயற்சியில் ஆசிரியர் ஒருவர் ஆய்வகம் அமைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் எலவனாசூர் கோட்டையில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு ஆறாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை 1200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இவர்களின் ஆங்கிலம் பேசும் திறன் மற்றும் எழுத்துத் திறன் குறைவாக இருந்ததை அறிந்த பள்ளியில் பணியாற்றும் ஆங்கில ஆசிரியர் ஒரு முயற்சியை மேற்கொண்டுள்ளார். தன்னுடன் 1997 ஆம் ஆண்டு திருக்கோவிலூர் தனியார் பள்ளியில் பயின்ற நண்பர்கள் மற்றும் அவர்களது மாணவர்களிடம் உதவி கேட்டு நிதி திரட்டி மூன்று லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உயர் தொழில்நுட்ப கம்ப்யூட்டர், மொழிமாற்றம் செய்யும் அதிநவீன கருவி, ப்ரொஜெக்டர் உள்ளிட்ட உபகரணங்களை வாங்கி ஆங்கில ஆய்வகம் ஒன்றை அமைத்துள்ளார்.
அந்த ஆங்கில ஆசிரியர் மாணவர்கள் குழுவாக ஆய்வகத்தில் சென்று தங்களது அறிவுத்திறனை மேம்படுத்திக்கொள்ள பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆய்வகத்தை கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி திறந்துவைத்தார். இதைத் தொடர்ந்து மாணவர்களிடையே அவர் பேசும்போது மாணவர்களுக்காக ஹைடெக் ஆங்கில ஆய்வகத்தை அமைத்த ஆங்கில ஆசிரியர் அக்பருக்கு எனது மனமார்ந்த நன்றி. மாணவர்கள் இதனை பயன்படுத்தி கூர்மையான சிந்தனையோடு ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு ஆங்கில மொழித் திறனை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக தன்னுடைய நண்பர்கள் மற்றும் பழைய மாணவர்களின் கடும் முயற்சியினால் நிதி திரட்டி உயர் தொழில்நுட்ப ஆங்கில ஆய்வகத்தை அமைத்து மற்ற பள்ளி ஆசிரியர்களுக்கு உதாரணமாகத் திகழ்ந்த ஆங்கில ஆசிரியருக்கு அப்பகுதியை சேர்ந்த அனைவரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.