திருவண்ணாமலையில் இருந்து அரசு பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்னை நோக்கி வந்துகொண்டிருந்தது. இதையடுத்து செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகில் வந்தபோது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் ஒருபுறமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் பேருந்தில் பயணம் மேற்கொண்ட 16 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயமடைந்த பயணிகளை மீட்டனர்.
அதன்பின் அருகிலுள்ள மருத்துவமனையில் அவர்களை சிகிச்சைக்காக சேர்த்தனர். அதனை தொடர்ந்து சாலையில் கவிழ்ந்து கிடந்த பேருந்தை கிரேன் வாயிலாக காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். இதனால் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது தொடர்பாக குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.