அரசு பேருந்து மீது கார் மோதிய விபத்தில் அண்ணன் தம்பி உள்பட 5 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்தில் உள்ள அண்ணா நகரில் அண்ணன் தம்பியான மணிகண்டன்(25), பாலமுருகன்(21) ஆகியோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அண்ணன் தம்பி இருவரும் நண்பர்களான நவீன்(19), விஷ்வா(20) ஆகியோருடன் பழனி முருகன் கோவிலுக்கு காரில் சென்றுள்ளனர். இந்த காரை இஸ்மாயில்(19) என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளப்பட்டி பிரிவு அருகே சென்ற போது டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி திருப்பூர் நோக்கி சென்ற அரசு பேருந்து மீது மோதியது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 5 பேரும் இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தில் கார் சுக்குநூறாக நொறுங்கியது. இதுபற்றி அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்ற விபத்துக்குள்ளான காரை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.