திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள லோயர்கேம்ப் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் தேனியை சேர்ந்த முருகேசன் என்பவர் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 14-ஆம் தேதி இவர் குமுளியிலிருந்து அரசு பேருந்தை திண்டுக்கல் நோக்கி ஓட்டி சென்றுள்ளார். அப்போது அந்த பகுதியில் மழை பெய்து பேருந்துக்குள் மழை நீர் ஒழுங்கியதால் பயணிகள் முருகேசனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் முருகேசன் அரசு பேருந்தை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஓட்டி சென்று புகார் அளித்ததோடு, வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும் முறையிட்டுள்ளார்.
இந்நிலையில் அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் விசாரணை நடத்தி முருகேசனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தனர். இதுகுறித்து மதுரை கோட்டம் மேலாண்மை இயக்குனர் ஆறுமுகம் கூறியதாவது, இதற்கு முன்பு நத்தம் பணிமனையில் வேலை பார்த்தபோது முருகேசன் பேருந்து திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் நிறுத்தாமல் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தி சென்றுள்ளார். அதேபோல் குமுளி- இராமேஸ்வரம் வழித்தடத்தில் பேருந்தை இயக்கும்போது ராமேஸ்வரத்துக்கு செல்லாமல் ராமநாதபுரத்தில் பேருந்தை நிறுத்தி சென்றதால் போக்குவரத்து கழகத்திற்கு இழப்பும், பொது மக்களுக்கு இடையூறும் ஏற்பட்டது.
கடந்த 14-ஆம் தேதி கிளை மேலாளரின் அனுமதி இல்லாமல் முருகேசன் பயணிகளை இறக்கிவிட்டு பேருந்தை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு ஓட்டி சென்றுள்ளார். இவ்வாறு வேலையின் போது ஒழுங்கீனமாக செயல்பட்டு அரசு போக்குவரத்து கழகத்திற்கு அவ பெயர் ஏற்படுத்தியதால் அவர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.