திருப்பூர் அரசு மருத்துவமனையில் குப்பைகள் குவிந்து கிடப்பதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் – தாராபுரம் சாலையில் அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகின்றது. இங்கு பல நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் திருப்பூர் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்கள் அங்கு சேரும் குப்பைகள் மற்றும் மருத்துவ கழிவுகள் அகற்றாமல் அதன் வளாகத்திலேயே மலைபோல் குவித்து வைத்துள்ளனர். அதுமட்டுமின்றி அவ்வப்போது அப்பகுதியில் மழையும் பெய்து வருவதால் அவ்விடம் துர்நாற்றம் வீசி வருகின்றது. இதனால் தற்போது அப்பகுதியில் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே குப்பையை அப்புறப்படுத்த வேண்டும் என்று பலர் கோரிக்கை வைத்துள்ளனர்.