மயிலாடுதுறையில் காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.ராஜ்குமார் மணல்மேட்டில் அரசு மருத்துவமனையை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மணல்மேடு பேரூராட்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ராஜகுமார் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவரை பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்றனர். அங்கு அவர் பேசுகையில், நான் எம்.எல்.ஏ.வாக 2006- 2011-ஆம் ஆண்டு இருந்த போது வில்லியநல்லூர், மணல்மேடு, முருகமங்கலம், இளந்தோப்பு, காளி ஆகிய பகுதிகளில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் சீரமைத்தேன்.
மேலும் மருத்துவர்கள் நியமிக்கப்பட்டனர். காளியில் அறுவை சிகிச்சை அரங்கம் கொண்டுவந்தேன். மீண்டும் நான் எம்.எல்.ஏ.வாக பொறுப்பேற்றால் மணல்மேட்டில் அனைத்து வசதிகளுடனும் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் அரசு மருத்துவமனையை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பேன் என்று அவர் கூறினார்.