தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையானது ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. ஒவ்வொரு வருடமும் அரசு சார்பாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். அந்த வகையில் கடந்த வருடம் 21 வகை மளிகை பொருட்கள் அடங்கிய பரிசுத்தொகுப்பு வழங்கி நிலையில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் பெற்றது. இதனை தொடர்ந்து வரவிருக்கும் பொங்கல் பண்டிகைக்கு அரசு என்ன வழங்கப் போகிறது? என்று மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்தது. இது குறித்த தகவல்களும் அப்போது வெளியாகிய வண்ணம் இருந்தது.
இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை ஒட்டி அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். இத்திட்டத்தை ஜனவரி 2ஆம் தேதி சென்னையில் முதல்வர் தொடங்கி வைக்கிறார். ரொக்கப் பணத்தோடு ஒரு கிலோ பச்சரிசியும், ஒரு கிலோ சர்க்கரையும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தப் பணத்தை அரிசி ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே பெற முடியும். சர்க்கரை அட்டை வைத்து இருப்பவர்களுக்கு இந்தப் பணம் கிடையாது. அதேபோல இலங்கைத் தமிழர் மறுவாழ்வு மையத்தில் வாழும் குடும்பத்தினருக்கும் பணம் கொடுக்கப்பட உள்ளது.