இந்தியாவிலுள்ள மாநிலங்களில் பல்வேறு அரசு துறைகளில் இருக்கும் காலிப் பணியிடங்களில் ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். பொதுவாக அரசு துறை வேலைகளில் சேருவதற்கு சாதி அடிப்படையில் சலுகைகள் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் ராஜஸ்தான் மாநில அரசு ஒதுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் இனி OBC/MBC/EWS சான்றிதழ் இன்றியும் அரசுப் பணிகளுக்கு விண்ணப்பிக்க முடியும் என்று அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
இது தொடர்பாக வெளியான அறிவிப்பில், அரசு வேலைகளில் சேர விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓபிசி), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (எம்பிசி) (அல்லது) பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் (இடபிள்யூஎஸ்) ஏதேனும் சாதிச்சான்றிதழ் இல்லாத பட்சத்தில் உறுதி மொழிப் பத்திரம் சமர்ப்பித்து வேலைக்கு விண்ணப்பிக்கலாம். இந்த அறிவிப்பு வாயிலாக நடப்பு ஆண்டு நடத்தப்பட்ட பல ஆட்சேர்ப்பு தேர்வுகளின் பல்வேறு விண்ணப்பதாரர்கள் பயன் அடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி இடஒதுக்கீடு பிரிவு விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தை பூர்த்திசெய்யும் கடைசி தேதிக்கு முன் தகுதிவாய்ந்த அதிகாரியால் வழங்கப்பட்ட சான்றிதழை வைத்து விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் அம்மாநிலத்தில் கால்நடை உதவியாளர் நேரடி ஆட்சேர்ப்புத் தேர்வு-2021, ஜூனியர் இன்ஜினியர் நேரடி ஆட்சேர்ப்புத் தேர்வு-2022 மற்றும் பட்வார் நேரடி ஆட்சேர்ப்புத் தேர்வு-2021 போன்ற இடங்களுக்கான தேர்வில் விண்ணப்பித்தவர்களுக்கும் இந்த அறிவிப்பு பொருந்துமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.