அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூபாய் 3 லட்சத்தை 45 ஆயிரம் பணத்தை மோசடி செய்த ஆறு பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி மாவட்டத்தில் உறையூர் பகுதியில் சாந்தி என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் சூர்யா. இந்நிலையில் சாந்தி கடந்த சில நாட்களாக தனது மகன் சூர்யாவிற்கு அரசு வேலை வாங்க முயற்சித்து வருகிறார். அந்த சமயத்தில் சாந்திக்கு இந்து முன்னணி கட்சியின் நிர்வாகி மணிகண்டன் அறிமுகம் ஆகியுள்ளார். அந்த சமயத்தில் மணிகண்டன் சாந்தியின் மகனுக்கு வேலை வாங்கி தருவதாக உறுதியளித்துள்ளார்.
இதனை நம்பி சாந்தி ரூபாய் 3 லட்சத்து 45 ஆயிரம் பணத்தையும் 4 நகையையும் மணிகண்டனிடம் கொடுத்துள்ளார். அதன்பின் மணிகண்டன் வேலை வாங்கி தராததால் சாந்தி கொடுத்த பணத்தை அவரிடம் திருப்பி கேட்டுள்ளார். இதனால் மணிகண்டன் மற்றும் அவருடன் சேர்ந்த ஆறு பேர் சாந்தியை தகாத வார்த்தையால் திட்டி தாக்கியுள்ளனர். இதுகுறித்து சாந்தி உறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் இந்து முன்னணி கட்சியின் நிர்வாகி மணிகண்டன், மீனா, ராஜேஸ்வரி, வசந்தி, சாந்தி மற்றும் மணிமேகலை ஆகிய ஆறு பேர் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.