சென்னை வேளச்சேரியில் வசித்து வருபவர் சதீஷ் (35). இவர் நேற்று பகலில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன் வந்து திடீரென தலையில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். அப்போது அவரை அங்கு காவலுக்கு நின்ற காவல்துறையினர் தீக்குளிக்க விடாமல் காப்பாற்றினார்கள். திமுக. பிரமுகரான சதிஷ் கவுன்சிலர் ஒருவர் மீது பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார்.
அதாவது அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி குறிப்பிட்ட கவுன்சிலர் ரூபாய் 18 லட்சம் வாங்கினார். அப்பணத்தை 6 பேரிடம் வாங்கி கொடுத்ததாகவும், தற்போது வேலை வாங்கி கொடுக்காமல் ஏமாற்றி விட்டதால் குறிப்பிட்ட கவுன்சிலர் மீது புகார் கொடுத்தும் போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என சதீஷ் தெரிவித்தார்.
அத்துடன் அந்த கவுன்சிலர் கொலை மிரட்டல் விடுக்கிறார். இதனால் வேறு வழியின்றி தீக்குளிக்க வந்ததாக சதீஷ் காவல்துறையினரிடம் கூறினார். பின் அவரை காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்து சென்றனர். தற்போது இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேளச்சேரி காவல்துறையினருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.