வேலை வாங்கி தருவதாக கூறி ஒருவர் 1 3/4 கோடி ரூபாய் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ரோஸ் நகரில் மோகன்பாபு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அறிமுகமான நபர், தான் உள்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறையில் இணை செயலாளராக வேலை பார்ப்பதாக கூறியுள்ளார். மேலும் எனக்கு ஐஏஎஸ் அதிகாரிகள் 2 பேரை தெரியும் எனவும், உங்களுக்கு அரசு சுகாதார ஆய்வாளர் வேலை வாங்கி தருகிறேன் எனவும் கூறியுள்ளார். இதனை நம்பி மோகன் பாபு அவரிடம் 15 லட்சம் ரூபாயை வழங்கியுள்ளார்.
இதனையடுத்து கிராம நிர்வாக அலுவலர் வேலை வாங்கி தருவதாக கூறி அந்த நபர் மோகன்பாபுவின் மனைவியிடமும் 15 லட்ச ரூபாயை வாங்கியதாக கூறப்படுகிறது. மேலும் மோகன்பாபு மூலம் சுமார் 23 பேரிடமிருந்து 1 கோடியே 83 லட்சத்தை அந்த நபர் வாங்கியுள்ளார். ஆனால் கூறியபடி யாருக்கும் வேலை வாங்கி கொடுக்கவில்லை. மேலும் பணத்தையும் தராமல் அந்த நபர் தலைமறைவாகி விட்டார். இதனால் பணம் கொடுத்தவர்கள் மோகன் பாபுவை தொந்தரவு செய்துள்ளனர்.
இந்நிலையில் மோகன் பாபு அந்த நபரை கடத்தி வீட்டில் வைத்திருப்பதாக அவரின் உறவினர்கள் சிலர் பெரம்பலூர் மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி போலீசார் மோகன்பாபுவின் வீட்டிற்கு சென்று அந்த நபரை பிடித்து விசாரித்ததில் அவர் திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் மோசடி வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.