ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூர் அருகேயுள்ள சிந்தாகவுண்டம் பாளையம் அம்மன் கோயில் தோட்டம் பகுதியில் வசித்து வருபவர் அங்கமுத்து (32). இவர் வேலைதேடி வந்துள்ளார். இந்நிலையில் அங்கமுத்துக்கு ஈரோட்டை சேர்ந்த குருதேவ் என்பவர் அறிமுகமானார். அவர் தன்னுடைய கல்லூரி நண்பர் என கூறி ராஜேஷ்குமார் என்பவரை அங்கமுத்துவுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். இதில் ராஜேஷ்குமார், அங்கமுத்துவிடம் நான் சென்னை தலைமை செயலகத்தில் பணியாற்றி வருகிறேன்.
உங்களுக்கு அரசு வேலை வாங்கித்தருகிறேன் என ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை உண்மை என நம்பிய அங்கமுத்து, ராஜேஷ்குமார் கூறிய வங்கிகணக்கில் சென்ற 2021 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 28ஆம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 2-ம் தேதி வரை பல தவணைகளில் ரூபாய் 16 லட்சத்து 50 ஆயிரம் செலுத்தியுள்ளார். ஆனால் கூறியபடி அவர் வேலை வாங்கி தரவில்லை. மேலும் பணத்தை திருப்பிதராமலும் இருந்து வந்துள்ளார். இதன் காரணமாக சந்தேகமடைந்த அங்கமுத்து சென்னை தலைமை செயலகம் சென்று விசாரித்து இருக்கிறார்.
அப்போது ராஜேஷ்குமார் அந்த அலுவலகத்தில் பணியாற்றவில்லை என்பது தெரியவந்தது. அதனபின் குருதேவையும், ராஜேஷ்குமாரையும் அங்கமுத்து பலமுறை போன் வாயிலாக தொடர்பு கொண்டுள்ளார். இந்நிலையில் அவர்கள் பல காரணங்கள் கூறி சமாளித்து வந்துள்ளனர். அத்துடன் இனி தங்களை நேரிலோ (அல்லது) போன் மூலமோ தொடர்புகொண்டால் கொலை செய்து விடுவோம் எனவும் மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதனால் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த அங்கமுத்து இதுகுறித்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் கொடுத்தார். இது தொடர்பாக விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ள காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி போலீஸ் இன்ஸ்பெக்டர் விசாரணை மேற்கொண்டு குருதேவ், ராஜேஷ்குமார் போன்றோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அத்துடன் தலைமறைவான 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.