தமிழகத்தில் கல்லூரி மாணவர்களின் வசதிக்காக புறநகர் ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. நேற்று முன்தினம் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
தமிழகம் முழுவதிலும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் போக்குவரத்து வசதியை ஏற்படுத்த தமிழக அரசு எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. இது பற்றி மக்கள் நீதி மைய தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “இறுதியாண்டு மாணவர்களுக்கு கல்வி சாலைகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் சென்னை புறநகர் ரயில்களில் மாணவர்களுக்கு அனுமதி இல்லை. ஏழை மாணவர்கள் நகருக்குள் வந்து செல்ல நம்பியிருப்பது புறநகர் ரயில்கள் மட்டுமே. அதனால் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.