செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், ஆளுநர் ஆய்வு குறித்து ஏற்கனவே எங்கள் கருத்துக்களை சொல்லி இருக்கிறோம். முதல்வர் தலைமையிலான அமைச்சரவை, அவர்களோடு நம்முடைய ஆளுநர் அவர்கள் கலந்தாய்வு செய்யலாம், கருத்துக்களை கேட்கலாம். ஆனால் நேரடியாக அரசுத் துறை செயலாளர்களோடு, உயர் அதிகாரிகளோடு, துணைவேந்தர்களோடு மற்றும் ஆளுநர் சந்திப்பது, கலந்துரையாடுவது என்பது மரபுகளுக்கு மாறாக அது அச்சத்தையும் ஐயத்தையும் ஏற்படுத்துகிறது. தமிழக அரசு விழிப்பாக இருக்கிறது என்று நாம் நம்புகிறோம்.
ஆளுநர் அவர்களின் நடவடிக்கைகளால் தமிழகத்தில் மாநில உரிமைகள் பறிபோகாமல் கல்வி நிறுவனங்கள் மறைமுக ஊடுருவல்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும். தற்காப்பு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம். ஆளுங்கட்சியை எதிர்க்கட்சி மாதிரி செயல்பட வேண்டும் என நாம் எதிர்பார்க்க முடியாது. ஆளுங்கட்சிக்கு ஒரு புரோட்டோகால் இருக்கு… விழிப்பாய் இருந்து செயல்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கலாம். ஆனால் எதிர்க்கட்சிகள் செயல்படுங்கள் என்று நாம் சொல்ல முடியாது என பதிலளித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், அனைத்து கட்சி தலைவர்கள், எல்லை மீட்புப் போராளிகள், தமிழறிஞர்கள், மொழி இன உணர்வாளர்கள் அனைவரையும் அழைத்து கலந்து பேச வேண்டும். தமிழக அரசு எந்த முடிவு எடுத்தாலும் ஒருமித்த கருத்து உருவாக வேண்டும். ஜனநாயக முறைப்படி அறிவிக்க வேண்டும். தமிழ்நாடு நாள் என்று தமிழக அரசு ஜூலை 18 அறிவித்திருந்தாலும் அது ஜனநாயக முறைப்படி கலந்தாய்வு செய்து பின்னர் அரசாணை பிறப்பிக்க வேண்டும்.
நவம்பர் 1 வரலாற்று முக்கியம் வாய்ந்த நாள் விடுதலை சிறுத்தைகளை பொருத்தவரை தமிழ்நாடு இறையாண்மை நாள் என்று கடைபிடிக்கிறோம். தமிழகத்தை பொறுத்தவரை எந்தப் பெயரில் அழைத்தாலும் இந்த நாளுக்குரிய வரலாற்று முக்கியத்துவத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என தெரிவித்தார்.