பிரிட்டனில் சுகாதார மற்றும் சமூகப் பணியாளர்களுக்கு கொடுத்த முன்னுரிமைகளை பொதுமக்கள் தவறாக பயன்படுத்துவதாக தகவல் கிடைத்துள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நாடுகள் தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு செலுத்தி வருகின்றது. அந்த வகையில் பிரிட்டன் பைசர் மற்றும் மாடர்னா என்ற இரண்டு தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு செலுத்தி வருகின்றது. இந்நிலையில் பிரிட்டன் அரசாங்கம் சுகாதார மற்றும் சமூக பராமரிப்பு பணியாளர்களுக்கு தடுப்பூசிகளை முன்பதிவு செய்து கொள்வதற்காக 119 என்ற தொலைபேசி எண்ணையும், நேஷனல் ஹெல்த் சர்வீஸ் என்ற இணையதளத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இணையதளத்தில் தடுப்பூசிகளை முன்பதிவு செய்பவர்கள் தடுப்பூசி மையத்திற்கு செல்லும் போது சரியான சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும் என்ற தகவலையும் பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது.
இதனிடையே தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்பதற்காக சிலர் இந்த இணையதளத்தில் தவறான தகவல்களை கொடுத்து முன்பதிவு செய்துள்ளதாகவும், தடுப்பூசி மையத்துக்கு கடந்த ஒரு வாரத்தில் வந்த மக்களில் 12 நபர்களின் சான்றிதழ்கள் சரியாக இல்லை என்றும் அதனால் அவர்கள் திருப்பி அனுப்பபட்டுள்ளதாகவும் பிரிட்டன் மருத்துவர் கூறியுள்ளார். மேலும் சுகாதார மற்றும் சமூக பராமரிப்பு பணியாளர்களுக்கு அளித்த முன்னுரிமைகளை பொது மக்கள் தவறாக பயன்படுத்துவதை நினைத்து பிரிட்டன் அரசு மிகவும் வருத்தம் அடைவதாகவும் அவர் தகவல் தெரிவித்துள்ளார்.