நீளமான தலைமுடி என்பது அனைவருக்கும் பிடிக்கும். நம் வீட்டில் உள்ள இந்த ஒரு பொருளை வைத்து நமது தலை முடியை எளிதில் பாதுகாக்க முடியும். அதை பற்றி நாம் தெரிந்துகொள்வோம் .
அரிசியில் சமைத்த பிறகு அல்லது ஊற வைத்து பிறகு எஞ்சி இருக்கும் மாவுச்சத்து நிறைந்த நீர் தலைமுடியை மிருதுவாகவும் பளபளப்பாகவும் வைத்திருப்பதோடு, இயற்கை கண்டிஷனராக செயல்படுகிறது. இதை வைத்து நமது முடியை அலசும் போது நல்ல பலன் தருகின்றது. அரிசி தண்ணிரில் கிட்டதட்ட 75 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை மாவுச் சத்து நிறைந்தது என்பது அரிசியை ஊறவைத்த பிறகு அல்லது வேக வைத்த பிறகு அந்த ஸ்டார்ச் முழுக்க இறங்கி நமக்கு கிடைக்கும் மாவுச்சத்து கொண்ட நீர். அரிசி தண்ணீரில் பல வகையான வைட்டமின் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளது. இதில் வைட்டமின் இ, வைட்டமின் பி, கனிமங்கள் அதிக அளவில் நிறைந்துள்ளது.
அரிசி கழுவிய தண்ணீரை தலைமுடிக்கு பயன்படுத்துவதன் மூலம் ஏராள நன்மைகள் கிடைக்கும். தலைமுடியின் சிதைவுகளை சரி செய்யும், தலை முடியை மென்மையாக்க உதவும், தலைமுடிக்கு அதிகமான பளபளப்பைத் தரும், தலை முடியை வலிமையானதாக மாற்றும், முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர அரிசி தண்ணீர் உதவும். அரிசி தண்ணீரை தலைக்கு பயன்படுத்துவதற்கு தயார் செய்வதற்கான அடிப்படை விஷயம் என்னவென்றால் அரிசி தண்ணீரைப் பயன்படுத்த பிரவுன் ரைஸ், பச்சரிசி, புழுங்கல் அரிசி, சிவப்பு அரிசி, பாஸ்மதி அரிசி என எந்த வகை அரிசியாக இருந்தாலும் பிரச்சனை இல்லை. அதை எடுத்து சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அழுக்கில்லாமல் கழுவிவிடுங்கள். அதில் 2 கப் அளவுக்கு தண்ணீர் விட்டு ஊற வைத்து விடுங்கள்.
அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை ஊற வைத்துவிட்டு பின்னர் அந்த தண்ணீரை வடிகட்டி எடுத்துக்கொள்ளுங்கள். அதை நாம் தலைமுடிக்கு பயன்படுத்தலாம். சில ஆய்வாளர்கள் சாதாரண அரிசி தண்ணீரைவிட புளிக்க வைத்த அரிசி தண்ணீர் சிறந்தது என்று கூறுகிறார்கள். இதற்கு நீங்கள் அரிசி தண்ணீரை எடுத்து அதை இரண்டு நாட்கள் ரூம் டெம்பரேச்சரில் அப்படியே வைத்து விட்டால் தண்ணீர் புளித்துவிடும். இதையும் நாம் தலைக்கு பயன்படுத்தலாம். கடைகளில் அதிக பணம் கொடுத்து வாங்கும் கண்டிஷனரை விட அரிசி தண்ணி சிறப்பாக செயல்படும்.
அரிசி தண்ணீரை பயன்படுத்தும் போது தலையில் எண்ணெய் பிசுக்கு எதுவும் இருக்கக்கூடாது. வழக்கம்போல் ஷாம்புவை பயன்படுத்தி தலையை அலசி விட்டு, பின்னர் அரிசி தண்ணீரை தலையில் கொஞ்சமாக ஊற்றி உச்சந்தலையில் இருந்து நுனி வரை நன்கு மசாஜ் செய்ய வேண்டும். பிறகு வெறும் தண்ணீரால் தலையை அலசினால் போதும். தலைமுடி நன்கு காய்ந்ததும் பார்த்தால் பட்டு போல் மாறிவிடும்.