ஆஸ்துமா நோயாளிகள் மற்றும் ஒவ்வாமை காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் எதிர்விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் சுமார் 7,000 ஆஸ்துமா நோயாளிகள் சில மணி நேர இடைவெளியில் கடுமையான சிக்கலை எதிர்கொண்டுள்ளனர்.
பலத்த மழை மற்றும் பெருவெள்ளம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், பிரித்தானியாவில் ஆஸ்துமா மற்றும் ஒவ்வாமையில் ஏற்படும் காய்ச்சல் அறிகுறிகள் காணப்படுபவர்கள் அவதிக்குள்ளாகலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியா நாட்டில் சுமார் 10 மாவட்டங்களில் பெருவெள்ளம் மற்றும் கனமழை ஏற்பட வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போதைய வானிலை மாற்றத்தால் ஆஸ்துமா நோயாளிகள் மற்றும் ஒவ்வாமை காரணமாக ஏற்படும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் ஆபத்தான எதிர்விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இன்றும் நாளையும் தென் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் மஞ்சள் வானிலை எச்சரிக்கையை விடுத்துள்ளது. இது மட்டுமின்றி, பெருவெள்ளம் ஏற்படும் வாய்ப்புகள் மிக அதிகம் என்பதால் மில்லியன் கணக்கான மக்கள் வெளியேற தயாராக இருக்க வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தனர். மூன்று மணி நேரத்தில் சுமார் இரண்டு அங்குல மழை பெய்யும் என வானிலை ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
மேலும், இங்கிலாந்தில் மூன்று மில்லியனுக்கும் அதிகமான வீடுகள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் என சுற்றுச்சூழல் நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. இதற்கிடையில் இடியுடன் கூடிய மழை காரணமாக கடந்த 1994ல் சுமார் 7,000 ஆஸ்துமா நோயாளிகள் சில மணி நேர இடைவெளியில் கடுமையான சிக்கலை எதிர்கொண்டதாக மருத்துவர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். மழை நேரத்தில் வெளியே செல்லும் சூழல் ஏற்பட்டால் கட்டாயம் மாஸ்க் அணிந்து கொள்ள வேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஏற்கனவே நேற்று பெய்த மழையால் சாலைகள் வெள்ளக்காடாக மாறிவிட்டது எனவும், மின் இணைப்பு துண்டிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாகவும் அதிகாரிகள் தரப்பு எச்சரித்துள்ளனர்.