கல்லூரிகளில் அரியர் தேர்வுகளை ஆன்லைனில் ஏன் நடத்த முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இன்றைய விசாரணையின் போது இறுதி பருவ மாணவர்களின் முந்தைய தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சி அடைய செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என பல்கலைக்கழக மானியக்குழு குறிப்பிட்டதுடன் தேர்வை நடத்த வேண்டியது அவசியம் என்றும் தேர்வை தள்ளி வைப்பது குறித்து கல்லூரிகள் கால அவகாசத்தை கோரலாம் என பதிலளித்தது. அப்போது இறுதி பருவத் தேர்வுகளை ஆன்லைனில் நடத்தும்போது அரியர் தேர்வுகளை நடத்த முடியாது ஏன் என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பிய நீதிபதிகள்.
அரியர் தேர்ச்சி விவகாரம் குறித்து பதில் மனு தாக்கல் செய்யாத யுஜிசி-க்கு கண்டனம் தெரிவித்தன. இதனிடையே அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என யுஜிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அரியர் தேர்வு தொடர்பாக தமிழக உயர்கல்வித்துறை மற்றும் யுஜிசி வரும் நவம்பர் 20-ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.