தொழிலாளிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் அருகே குருசடி பகுதியில் ஆன்றோ சேவியர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இதே பகுதியில் புனித அந்தோணியார் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலய வளாகத்திற்குள் கருணை இல்லம் ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில் ஆன்றோ சேவியர் மதுகுடித்துவிட்டு கருணை இல்லத்திற்குள் நுழைந்தார். அவர் அங்குள்ள பொருள்களை சூறையாடிவிட்டு அருட் பணியாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து கடந்த 2020-ம் ஆண்டு ஆசாரிபள்ளம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஆன்றோ சேவியரை கைது செய்தனர். இந்த வழக்கு நாகர்கோவில் மகிளா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆன்றோ சேவியருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் 10,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.