அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியின் பிரதான தொழிலாக கைத்தறி நெசவு அமைந்துள்ளது. மனம் வீசும் மல்லிகை பூக்கள் அதிகளவில் விளைவிக்கப்படுகிறது. கம்பு, சோளம், உளுந்து போன்ற சிறுதானிய வகைகள் சாகுபடியும் அதிகம். அருப்புக்கோட்டை தொகுதியில் 6 முறை அதிமுகவும், 5முறை திமுகவும் வெற்றி பெற்றுள்ளன. 1971ஆம் ஆண்டு தேர்தலில் ஒரு முறை மட்டும் பாவர்ட் பிளாக் கட்சி வெற்றி பெற்றுள்ளது. 1977 ஆம் ஆண்டு அருப்புக்கோட்டை தொகுதியில் வெற்றிபெற்ற எம்ஜிஆர் முதலமைச்சரானார்.
பெண் வாக்காளர்கள் மிகுதியாக உள்ள இந்த தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,22,980 ஆகும். தொகுதி மக்களின் பிரதான தொழிலான கைத்தறி நெசவு மேம்பாட்டிற்கும், தொழிலாளர் நலனுக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது இத்தொகுதி மக்களின் முக்கிய புகார். உற்பத்தி செய்யப்பட்ட துணிகளை ஈரோடு வரை கொண்டு செல்வதில் சிரமம் உள்ளதால் மதுரையில் ஜவுளி சந்தை அமைக்க வேண்டும் என்பது மக்களின் நீண்ட நாள் கோரிக்கை.
கைத்தறி விசைத்தறி தனி அமைச்சகம் அமைத்தால் தங்களுக்கு நல்லது நடக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை. விளைநிலங்களில் காட்டு பன்றிகள் தொல்லை அதிகமாக உள்ளதாகவும், அவற்றை கட்டுப்படுத்த எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை என்பதும் விவசாயிகள் குற்றச்சாட்டு. பயிர் காப்பீடு தொகை முறையாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் அவர்களின் சொல்கிறார்கள். நீண்டகால கோரிக்கைகளுடனும் இனிவரும் காலத்தில் அவை விரைவில் நிறைவேறும் என்று நம்பிக்கையுடனும் அருப்புக்கோட்டை தொகுதி மக்களும் தேர்தலுக்காக காத்திருக்கின்றனர்.