அமெரிக்காவில் பெண் ஒருவர் தன் 3 குழந்தைகளையும் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் மூதாட்டி ஒருவர் இரவுப்பணி முடித்து தன் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டிற்குள் அவரது 3 பேரகுழந்தைகளும் கத்தியால் தாக்கப்பட்டு இறந்து கிடப்பதைக் கண்டு கடும் அதிர்ச்சிக்குள்ளானார். இதனைத்தொடர்ந்து உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அதன்பிறகு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், குழந்தைகளின் தாய் லிலியானா காரில்லோ என்பவர் தலைமறைவானதால் அவரை தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மூன்று குழந்தைகளில் 2 ஆண் குழந்தைகளுக்கு முறையே 3 மற்றும் 2 வயது ஆகிறது, மூன்றாவது 6 மாத பெண் குழந்தை.
இதனிடையே லிலியானா தன் காரில் தப்பித்து சென்று, ஓரிடத்தில் நிறுத்தி விட்டு மற்றொரு காரை திருடி எடுத்து சென்றபோது காவல்துறையினரிடம் மாட்டிக் கொண்டுள்ளார். மேலும் லிலியானாவிற்கு கடும் மன நல பிரச்சினைகள் இருந்துள்ளது. இது குறித்து அவரின் கணவர் எரிக்கின் உறவினர் கூறியுள்ளதாவது, லிலியானாவிற்கு மனநிலை பிரச்சனை இருப்பதால் தான் எரிக் குழந்தைகளை கவனித்துக் கொள்ள நினைத்தார்.
ஆனால் தக்க சமயத்தில் குழந்தைகளை தந்தையிடம் ஒப்படைக்க அரசு தவறியதால் எரிக் தற்போது குழந்தைகளை இழந்து நிற்கிறார். மேலும் அவர், எரிக் மற்றும் அவரின் குழந்தைகளை அரசுதான் கைவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் லிலியானாவிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.