சோதனை சாவடியை சேதப்படுத்திய 2 பேரை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி மாவட்டம் வருசநாடு அருகே உள்ள கோம்பைத்தொழுவில் மிகவும் அழகிய சுற்றுலா தலமாக மேகமலை அருவி உள்ளது. இந்நிலையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அருவியில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவத்தன்று கோம்பைத்தொழுவை சேர்ந்த முத்துக்குமார் மற்றும் கணேசன் ஆகிய இருவரும் மேகமலை அருவி குளிக்க சென்றுள்ளனர். அப்போது சோதனை சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வனக்காப்பாளர் அழகர்சாமி அவர்களை அருவிக்கு அனுமதிக்க மறுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த இருவரும் அழகர்சாமி தகாத வார்த்தைகள் பேசிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். இதற்குப்பின் அழகர்சாமியும் பணி முடிந்து வீட்டிற்கு சென்றுவிட்டு மறுநாள் காலை சோதனை சாவடிக்கு வந்தார். அப்போது சோதனை சாவடி சேதமடைந்ததை பார்த்த அவர் உடனடியாக மயிலாடும்பாறை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சோதனை சாவடியை சேதப்படுத்தியது கணேசன் மற்றும் முத்துக்குமார் என தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவர்கள் 2 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.