விடுதியில் இரவு நேரத்தில் நுழையும் மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்காத கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பாரதியார் பல்கலைக்கழகம் மருதமலை ரோட்டில் இருக்கிறது. அங்கு ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் வெளியூரில் இருந்து படிக்க வரும் மாணவர்கள் அங்குள்ள கல்லூரி விடுதியில் தங்கிப் படிக்கின்றனர். அங்குள்ள செல்லம்மா விடுதியில் 3000-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் உள்ளனர். கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் அரைகுறை ஆடையுடன் இரு மர்மநபர்கள் விடுதிக்குள் நுழைந்து மாணவிகளின் செல்போன்களை திருடி செல்கின்றனர். இதனைப்பற்றி மாணவிகள் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர்.
ஆனால் அவர்கள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் மர்மநபர்கள் இரவு அரைகுறை ஆடையுடன் விடுதிக்கு வந்துள்ளனர். இதனை பார்த்து ஆத்திரமடைந்த 200-க்கும் அதிகமான மாணவிகள் நடவடிக்கை எடுக்காத கல்லூரி நிர்வாகத்தை கண்டித்தும், கல்லூரி விடுதியில் நுழையும் மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் போராட்டம் நடத்தினர். அதன் பின் கல்லூரி முன்பு உள்ள சாலையில் போராட்டம் நடத்த முயன்றபோது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் மாணவிகளை தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால் கல்லூரி வளாகத்தில் மீண்டும் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.