சகோதரர்கள் அரைநிர்வாண கோலத்தில் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று மனு அளித்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளி சிப்காட் பகுதியில் சகோதரர்களான பழனியப்பன், வரதராஜன் ஆகியோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சகோதரர்கள் தங்களது தந்தை ராமன் என்பவரது பெயரில் இருக்கும் நிலத்தை பாகப்பிரிவினை செய்வதற்காக வில்லங்க சான்றிதழை பெற்றுள்ளனர். அதில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 13 செண்ட் நிலத்தில் 6 1/2 செண்ட் நிலத்தை அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கு போச்சம்பள்ளி சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்து கொடுத்தது தெரியவந்துள்ளது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சகோதரர்கள் அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில் அரை நிர்வாண கோலத்தில் போச்சம்பள்ளி சார்பதிவாளர் அலுவலகத்திற்கு அண்ணன், தம்பி இருவரும் சென்றுள்ளனர். இவர்கள் நெற்றியில் பட்டையும், உடலில் நாமம் போட்டுக்கொண்டு கையில் தட்டை ஏந்தியவாறு யாசகம் கேட்பது போல சார்பதிவு அலுவலர் ஷர்மிளா என்பவரிடம் மனு அளித்துள்ளனர்.
இது குறித்து விசாரணை மேற்கொண்ட நடவடிக்கை எடுப்பதாக ஷர்மிளா உறுதியளித்த பிறகு அண்ணன் தம்பி இருவரும் அங்கிருந்து சென்றுள்ளனர். இதுகுறித்து ஷர்மிளா கூறும்போது, நான் விடுப்பில் இருந்த போது பொறுப்பு அதிகாரியாக இருந்தவர் பத்திர பதிவு செய்து கொடுத்துள்ளார். இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு தவறுகள் இருக்கும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.