தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் இன்றும் அரசு பள்ளிகளில் டிசம்பர் 16ஆம் தேதியும் அரையாண்டு தேர்வு தொடங்குகிறது. தேர்வுக்கான வினாத்தாள்களை எப்படி கையாள வேண்டும் என்பது குறித்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு முதன்மை கல்வி அலுவலர்கள் சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர். அதன்படி பள்ளிக்கல்வித்துறை வழங்கியுள்ள கால அட்டவணையின் படி மட்டுமே குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட பாடங்களுக்கு மட்டுமே தேர்வுகள் நடத்தப்பட வேண்டும். தேர்வு நடைபெறும் நாளில் காலை 8 மணிக்கு பிற்பகல் 12 மணிக்கு வினாத்தாள்களை கட்டுக்கோப்பு மையத்திலிருந்து தனிநபர் மூலமாக பெற்று செல்ல வேண்டும்.
பிற்பகல் நடைபெறும் தேர்வுக்கு காலையிலேயே வினாத்தாள்களை யாரும் எடுத்து வைக்கக் கூடாது. மேலும் வினாத்தாள்களை எந்த ஒரு காரணத்திற்காகவும் மொபைல் போனில் புகைப்படம் எடுக்க கூடாது. வினாத்தாள்களை புகைப்படம் எடுப்பதால் அவை தேர்வுக்கு முதல் நாள் அல்லது தேர்வு நடக்கும் நேரத்திற்கு முன்பு சமூக வலைத்தளங்களில் வெளியாகும் அபாயம் உள்ளதால் அதனை தடுப்பதற்காக பள்ளி கல்வித்துறை உஷாராக இந்த அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது.