குஜராத் மாநிலம் சூரத்தில் ஜவுளிகளை வாங்க தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு வியாபாரி ஒருவர் சென்றுள்ளார். பல்வேறு துணிக்கடைகளுக்கு சென்று ஜவுளிகள் வாங்கும் வேலையில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். சூரத்திற்கு அந்த தமிழ் வியாபாரியின் வருகை குறித்த தகவல் நியூ டிடி மார்க்கெட்டில் கடை வைத்திருக்கும் தொழிலதிபர் சந்திரகாந்த் ஜெயினுக்கு சென்றுள்ளது.
உடனே அவரை அழைத்து வரும்படி தனது ஊழியர்களிடம் கூறியுள்ளார். இதையடுத்து தமிழ் வியாபாரியை டிடி மார்க்கெட் கடைக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது தன்னிடம் வாங்கிய ஜவுளிகளுக்கு செலுத்த வேண்டிய 4 லட்ச ரூபாய் பணம் எங்கே என்று அந்த தொழிலதிபர் கேட்டுள்ளார். அதற்கு அவர் பதில் சொல்ல முடியாமல் திணறியுள்ளார்.
இந்நிலையில் தனக்கு வர வேண்டிய பணத்தை கொடுக்காத கோபத்தில் தமிழ் வியாபாரியின் சட்டையை கழட்டச் சொல்லியிருக்கிறார். பின்னர் அவரது இடுப்பில் சேலையை கட்டி கழுத்தில் போர்டு ஒன்றை மாட்டி தெரு தெருவாக இழுத்துச் சென்று துன்புறுத்தியுள்ளனர். இதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர். இதுபற்றி தகவலறிந்த போலீசார் விரைந்து சென்று சம்பந்தப்பட்ட தொழிலதிபர் மற்றும் அவரது ஊழியர்கள் சிவா, சோகம் ஆகிய மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஆனால் தமிழ் வியாபாரி தனக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து எந்தவித புகாரையும் தெரிவிக்க மறுத்துவிட்டார். இருப்பினும் போலீசார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணையில் இறங்கியுள்ளனர். குஜராத் மண்ணில் தமிழர் மீது நடத்தப்பட்ட கொடுமை தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.