தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியைப் பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின், மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா பேரிடர் காலத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் 100 நாட்களில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தில் பயிற்சி பெற்றவர்கள் திருக்கோவில்களில் பணி செய்வார்கள் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பெண்களையும் அர்ச்சகராக்கும் திட்டம் உள்ளது. அறநிலையத்துறை கோவில்கள் அனைத்திலும் தமிழில் அர்ச்சனை செய்யப்படும். தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்ற பாதகை வைக்கப்பட்டு, அர்ச்சனை செய்பவர் பெயர், மொபைல் எண் அதில் இடம்பெறும் என்று அவர் கூறியுள்ளார்.
இதனையடுத்து அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் புனரமைக்கப்பட்டு புதிய மாணவர் சேர்க்கைக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். அர்ச்சகர் பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வருவதைப் பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.