Categories
அரசியல் மாநில செய்திகள்

அர்ஜூனன் போல குறி வையுங்க…. திமுகவின் குறி தப்பாது… ஸ்டாலின் அட்வைஸ் ..!!

திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், ஐந்து முறை ஆட்சியில் இருந்தோம் என்று பெருமைபடச் சொல்கிறோம். உண்மைதான். ஆறாவது முறையும் நாம்தான் ஆட்சிக்கு வந்தோம் என்ற பெருமையைப் பெற்றாக வேண்டும்! இந்தத் தேர்தலில் நாம் அடைய இருக்கிற வெற்றி என்பது, இதுவரை ஐந்து முறை பெற்ற வெற்றிக்குச் சமம்! இதன் உண்மையான பொருளை நீங்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்! ஐந்து முறை வெற்றி பெற்றதற்குச் சமம்தான் இப்போது அடையப் போகும் வெற்றி. அதனை நீங்கள் அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும்!

மத்தியில் பா.ஜ.க. ஆட்சி, அதன் அதிகார பலம் ஒரு பக்கம்! மாநிலத்தில் அ.தி.மு.க. ஆட்சி, அதன் பண பலம் மறுபக்கம்! இவர்கள் இருவரும் இன்றைக்கு தமிழ்நாட்டில் இருக்கிற அனைத்து ஊடகங்களையும் வளைத்துவிட்டார்கள். நமக்கு எதிரான செய்திகளை இந்த ஊடகங்கள் போடுகிறார்கள் என்பது மட்டுமல்ல, பா.ஜ.க., அ.தி.மு.க.வின் ஊதுகுழல்களாக அனைத்து ஊடகங்களும் மாறிவிட்டன. இது இன்னொரு பக்கம்! இந்த மும்முனைத் தாக்குதலை நாம் எதிர் கொண்டாக வேண்டும்.

இது ஒன்றும் நமக்குப் புதிதல்ல; இவற்றை எதிர்கொண்டுதான் ஆகவேண்டும். ஒவ்வொரு தேர்தலிலும் இதுபோல ஏதாவது புதுப்புது அஸ்திரங்களை நாம் எதிர்கொண்டுதான் வருகிறோம். நம்மை எதிர்கொள்ள முடியாமல் புதிது புதிதாக பலரை உருவாக்குகிறார்கள். சிலரை கட்டாயப்படுத்தி கட்சி தொடங்க வைக்கிறார்கள். எல்லாச் சதிகளையும் செய்கிறார்கள். தேர்தல் நெருக்கத்தில் எதை வேண்டுமானாலும் செய்வார்கள். இப்படி தாக்குதல் நடத்துகிறார்களே என நாம் பலவீனம் ஆகிவிடக்கூடாது. சோர்ந்துவிடக் கூடாது. மேலும் மேலும் உழைக்க வேண்டும். ஆறாவது முறை வெற்றி பெறுவதற்கு அனைவரும் ஆறு மடங்கு உழைக்க வேண்டும்.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் சொல்வார்களே, “உண்மையான வீரனுக்குத் தெரியவேண்டியது கிளியின் கழுத்துதானே தவிர, கிளியல்ல, கிளையல்ல, மரமல்ல!”. அர்ஜூனன் வைத்த குறி தப்பாது என்பதைப் போல, தி.மு.க.வினர் வைத்த குறி தப்பாது என்பதை நாம் நிரூபித்தாக வேண்டும்.

கடந்த தேர்தலிலேயே நாம்தான் வெற்றி பெற்றிருக்க வேண்டும். நமக்கும் அவர்களுக்கும் ஒரு சதவிகிதம்தான் வித்தியாசம். ஒரு சதவிகித வித்தியாசத்திலேயே ஆட்சிக்கு வர முடியாத நிலைமை ஆகிவிட்டது. நாம் வெற்றி பெற்றுவிடுவோம் என்ற மிதப்பு இருந்தது. அதனால்தான் சில தொகுதிகளை இழக்க வேண்டியதாயிற்று. அத்தகைய மிதப்பு கூடாது. நமக்குள்ளே உள்ள மாறுபாடுகள், வேறுபாடுகள், சண்டைகள், சச்சரவுகளைக் களையுங்கள். அதுவே வெற்றிக்கு முதல் அடித்தளம்.

Categories

Tech |