புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி தொகுதி விவசாயத்தையும், மீன்பிடித்தல் முக்கிய தொழிலாக நம்பியுள்ளது. அறந்தாங்கி வீரமாகாளியம்மன் கோவில், கோட்டைப்பட்டினம் ராவுத்தர் அப்பா தர்காவும் புகழ் பெற்றதாகும். அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் 1 முறையும், சுயேச்சை வேட்பாளர்கள் 3 முறையும் வெற்றி பெற்றுள்ளனர். திமுக 4 முறையும், அதிமுக அதிக அளவாக 7 முறையும் தொகுதியை கைப்பற்றியுள்ளன. தற்போதைய அதிமுவின் எம்எல்ஏ ரத்தினசபாபதி.
அறந்தாங்கி தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,36,040 பேர். பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பது அறந்தாங்கி மக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. வார சந்தையில் உரிய பராமரிப்பை மேற்கொண்டு அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது. போக்குவரத்து நெரிசலை தவிர்க்க விரிவான புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உறுதி செய்யும் வகையில் தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும் என்றும் மக்கள் கூறுகின்றனர். கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் பகுதிகளில் குளிர்பதன கிடங்கு அமைத்து தர வேண்டும் என்றும், துறைமுகத்தை கூடுதலாக நீட்டித்து தர வேண்டும் என்றும் மீனவர்கள் வலியுறுத்துகின்றனர். முகத்துவாரத்தை தூர் வார வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாக உள்ளது.
மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதலை தடுக்க நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பது முக்கிய வேண்டுகோளாக உள்ளது. சாலைகள் குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு தகுதியற்ற வகையில் உள்ளதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அரசு மருத்துவமனையில் எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை என்றும் புகார் கூற மக்கள் மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.