கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொதுவாகக் காய்ச்சல், தும்மல், சோர்வு உள்ளிட்ட அறிகுறிகள் தென்படும். இருப்பினும் தற்போது கரோனா தொற்றால் பாதிக்கப்படும் பலர் எவ்வித அறிகுறிகளுமின்றி இருக்கின்றனர்.
இதுபோல கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களை asymptomatic cases என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். இவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் சமீப காலமாக அதிகரித்துவருகிறது. இது குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகமும் தனது கருத்தைத் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் பேசுகையில், “மாநில அரசின் ஆம்புலன்ஸுகளுக்கு தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே தனியார் மருத்துவமனைகளின் ஆம்புலன்ஸ்களை அரசு பயன்படுத்திக்கொள்ள தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அரசுக்குத் தேவைப்படும் போது தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸ்கள் பணியாற்ற வேண்டும். மத்திய அரசின் வழிகாட்டுதல்களின்படி கோவிட்-19 தொற்றின் சில அறிகுறிகளை மட்டும் வெளிப்படுத்தும் நபர்களுக்கு வீட்டிலேயே சிகிச்சையளிக்கத் தேவையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தற்போதுவரை டெல்லியில் 6,923 பேருக்கு கோவிட்-19 உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 1,476 பேர் மட்டுமே மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். மற்றவர்கள் வீடுகளிலும் கோவிட்-19 சிறப்பு முகாம்களிலும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
மேலும், டெல்லியில் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 75 விழுக்காட்டினர் எவ்வித அறிகுறிகளையும் வெளிப்படுத்தாத asymptomatic cases-களாகவும், குறைவான அறிகுறிகளை வெளிப்படுத்துபவர்களாகவும் உள்ளனர்” என்றார்.