திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தன்னைப் பற்றி நினைத்தால் தான் தூக்கம் வரும் என தமிழக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்
சேலம் மாவட்டத்தில் இருக்கும் வனவாசி அரசு தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் நடந்த நீரேற்று மூலம் வறண்ட ஏரிகளுக்கு நீர் வழங்கும் திட்டத்தில் பயனடையும் ஏரிகளை சீரமைத்து மேம்படுத்துவதற்கான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா, தொழில்நுட்ப கல்லூரியின் முடிவுற்ற கட்டிடங்கள் திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகியவற்றில் முதலமைச்சர் பழனிசாமி அவர்கள் இன்று பங்கேற்றார். விழாவின் போது பேசிய பழனிச்சாமி அவர்கள் கூறுகையில், “நான் முதல்வராக பதவி ஏற்ற பிறகு கூடுதலான எம்பிபிஎஸ் இடங்கள் தமிழகத்திற்கு கிடைத்துள்ளது. 7.5 சதவீத உள் ஒதுக்கீடு மருத்துவ படிப்பிற்கு கிடைத்ததால் அரசு பள்ளி மாணவர்கள் பெரிதும் பயன் பெற்றுள்ளனர்.
திமுக தலைவரான ஸ்டாலினுக்கு தினமும் என்னை நினைத்து பார்த்தால் தான் தூக்கம் வரும். அவரால் தமிழகம் முதல் இடத்தில் இருப்பதை பார்த்து பொறுமையாக இருக்க முடியவில்லை. அதனால் தான் ரூமில் அமர்ந்து கொண்டு அறிக்கை விடுகிறார். அவர் அறிக்கை நாயகனாக திகழலாம். தமிழக அரசை குறை சொல்ல வேண்டும் என்பதற்காகவே எதிர்க்கட்சிகள் இருக்கின்றன. அவை அரசியலோடு செயல்படாமல் மக்கள் நலன் பொருட்டு செயல்பட வேண்டும். மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. தமிழகம் முழுவதிலும் உள்ள குளங்கள், ஏரிகள் தூர்வாரப்பட்டால் குடிநீர் பிரச்சனை முழுவதுமாக இல்லாமல் போகும்” என கூறியுள்ளார்.