தண்ணீரில் மூழ்கி பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குன்றத்தூர் நாலு ரோடு பகுதியில் மோகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெகதீசன்(17) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அரசு பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஜெகதீசன் தனது நண்பர்களான சூர்யா, யுவராஜ் ஆகியோருடன் செம்பரம்பாக்கம் ஏரியில் குளிப்பதற்காக சென்றுள்ளார்.
அப்போது நீச்சல் தெரியாததால் ஜெகதீசன் குளித்து கொண்டிருந்த போது தண்ணீரில் மூழ்கினார். இதனை பார்த்த சூர்யா ஜெகதீசனை மீட்க முயற்சி செய்தார். ஆனால் அவரை மீட்க இயலாததால் சூர்யா மேலே வந்தார். தனது நண்பர் தண்ணீரில் மூழ்கியதை அறியாமல் யுவராஜ் தனது செல்போனில் அதை வீடியோ பதிவு செய்து கொண்டிருந்தார். பின்னர் ஜெகதீசன் ஏரியில் மூழ்குவதை பார்த்த அதிர்ச்சியடைந்த நண்பர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஜெகதீசனின் உடலை மீட்டனர். பின்னர் மாணவனின் உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் நீச்சல் தெரியாமல் ஜெகதீசன் ஏரியில் மூழ்கிய செல்போன் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.