நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் எல்.முருகனிடம், புதிதாக வந்த திமுக சட்டமன்ற உறுப்பினர் சரவணன், குஷ்பு ஆகியோருக்கு சீட் கொடுக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பேசிய அவர், கட்சியில் உழைத்தவர்களுக்கும் சீட் கொடுத்துள்ளோம். எங்கள் கட்சியில் புதுசா வருகிறவர்களுக்கு அங்கீகாரம் கொடுக்க வேண்டும். இது தொண்டர்கள் மத்தியில் எந்த சோர்வையும் ஏற்படுத்தாது. எங்களுடைய தொண்டர்கள், எங்களுடைய நிர்வாகிகள் மிகவும் கட்டுப்பாடு மிக்கவர்கள். எங்களுடைய கட்சியை சார்ந்தவர்கள் கொள்கைக்காக வந்தவர்கள்.
காங்கிரஸ்காரர்கள் மாதிரி கிடையாது. நாங்கள் ஜனநாயக முறையில் வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கிறோம். எங்கள் வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதற்கு முன்னால் எங்களுடைய அலுவலகத்தில் அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் வரவழைக்கப்பட்டு, மண்டல தலைவர்கள் வரவழைக்கப்பட்டு அவர்கள் ஏகமனதாக சொன்ன பெயர்களை நாங்கள் மேலே பரிந்துரைத்தோம். அந்த பெயரை பரிசீலித்து அறிவித்துள்ளார்கள்.
சரவணன் பெயர் பரிசீலனை செய்தது நேற்று ( நேற்று முன்தினம் ) தானா… இல்லை முன்கூட்டியே திட்டமிடப்பட்டதா ? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு அறிவிச்சாச்சு விடுங்க என தெரிவித்தார். எங்களுடைய தேர்தல் அறிக்கை தயாரிக்க மக்களிடம் கருத்து கேட்பதற்கான இயக்கத்தை தொடங்கியுள்ளோம். 21ஆம் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். எங்களின் தேர்தல் அறிக்கை மக்களுடைய குரலாக இருக்கும்.18ஆம் தேதி நான் வேட்புமனுவை தாக்கல் செய்கின்றேன். தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளில் பிரசார கூட்டத்தில் பிரதமர் பங்கேற்பார்.