அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களின் பெயர்களை மாற்றி ஸ்டிக்கர் ஒட்டி தாங்கள் செய்ததாக காட்டிக்கொள்ளும் அறிவிப்பு அரசாக தமிழக அரசு செயல்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சேலத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக அயோத்தியபட்டினம் வந்துள்ளார். அப்போது செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, ‘தமிழக அரசு விடியல் அரசு’ என சொல்லி வந்த நிலை மாறி, தற்போது அறிவிப்பு அரசாக செயல்பட்டு வருவதாக கூறியுள்ளார். அதாவது மத்திய அரசு கொண்டு வந்த திட்டங்களை பெயர் மாற்றி அதனை ஸ்டிக்கரை ஒட்டி அறிவிப்பு அரசு செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் அந்த வகையில் கடந்த ஆட்சியில் அதிமுக அரசு கொண்டு வந்த திட்டங்களின் பெயர்களையெல்லாம் மாற்றி திமுக ஆட்சி செயல்படுவதாகவும் தெரிவித்தார். அதன்படி தமிழக முதலமைச்சர் அம்மா உணவகத்தை தொடர்ந்து நடத்துவோம் என்று கூறிய நிலையில், கலைஞரின் பெயரில் நடத்தப்போவதாக அமைச்சர்கள் தெரிவித்துக் கொள்வது பெரும் கபடநாடகம் என்று விமர்சித்துள்ளார்.
மேலும் பேசிய அவர் தமிழகத்தில் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருவது மிகுந்த வேதனை அளிப்பதாகவும் மற்றும் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு காவல்துறையினரின் கைகள் கட்டப்பட்டு, அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாவட்ட செயலாளர்கள் மூலம் வழி நடத்துவதால் இது போன்ற குற்றங்கள் பெருகி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் தமிழக முதலமைச்சரை பற்றி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டால் அவர்களை தமிழக முதல்வர் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார். இது எந்த வகையில் நியாயம் எனவும் ஜனநாயகத்துக்கு எதிரான செயல் எனவும் தெரிவித்துள்ளார்.